தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகை கொள்ளை
மேலூரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மேலூர்,
மேலூரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தனியார் நிறுவன அதிகாரி
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலூரில் உள்ள அவரது வீட்டு மாடியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரபுசங்கரின் மாமனார் பாலகிருஷ்ணன் மகள் வீட்டை பார்க்க நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
95 பவுன் நகை கொள்ளை
உடனே அவர் இதுகுறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 95 பவுன் நகைகள், 45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் பொன்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் அருகே சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
விசாரணை
மேலும் வீட்டில் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.