ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக ரூ.2½ கோடி மோசடி


ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக ரூ.2½ கோடி மோசடி
x

ராமநாதபுரத்தில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 31 பேரிடம் ரூ.2½ கோடி ஏமாற்றிய அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 31 பேரிடம் ரூ.2½ கோடி ஏமாற்றிய அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.

நகை ஏலம்

ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி பகுதியை சேர்ந்தவர் இளங்கண்ணன். இவரது மகள் மீராலெட்சுமி (வயது 26). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மனைவி வளர்மதி, அவரின் தங்கை காயத்ரி ஆகியோர் பிரபல நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியுள்ளனர்.

அந்த நிறுவனத்தில் அடமானம் வைத்த நகைகளை திருப்பாதவர்களின் நகைகளை ஏலம் விடுவதாகவும், அதனை ஒரு பவுன் ரூ.35 ஆயிரம் என குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி உள்ளனர்.

மேலும், ராமநாதபுரம் ராஜேஸ் என்பவரின் நகைக்கடையில் தவணை முறையில் பணம் செலுத்தினால் குறைந்த விலைக்கு நகை தருவதாகவும் சொன்னதன் பேரில் பல்வேறு தவணைகளில் மீராலெட்சுமி தனது வீட்டில் வைத்து ரொக்கமாகவும், வங்கி மூலமும் மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தாராம். இந்த பணத்தை பெற்றுக் கொண்டு நகையும் தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வளர்மதி, காயத்ரி ஆகியோர் மோசடி செய்ததாக தெரிகிறது.

புகார்

இதற்கு ராஜேஷ், பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். பணம் குறித்து கேட்டபோது அனைவரும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்து மீராலெட்சுமி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். மீரா லெட்சுமி புகார் அளித்த நிலையில் மேற்கண்டவர்களிடம் ஏமாந்துள்ளதாக அவரையும் சேர்த்து மொத்தம் 31 பேர் இதுபோன்று புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்தபோது மொத்தம் ரூ.2½ கோடி அளவில் இவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரன், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடிக்கு காரணமானவர்களை தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்ட உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டி வலசையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மனைவி வளர்மதி (30), அவரின் தங்கை ராஜேஸ்வரன் மனைவி காயத்ரி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உடந்தையாக இருந்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story