மாதவரம் அருகே ஜீப்-ஷேர் ஆட்டோ மோதல்; வடமாநில தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
மாதவரம் அருகே ஜீப்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார். 2 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
சென்னை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் மது. இவர் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ஒரு கார் ஷோரூமில் புதிதாக ஜீப் ஒன்றை வாங்கினார். இதை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 39) என்பவரை அழைத்துள்ளார். இந்த நிலையில் ஜீப்பின் சாவியை கார்த்திக்கிடம் கொடுத்து ஓட்டுவதற்கு கூறியுள்ளார். அப்போது கார்த்திக் ஜீப்பை ஓட்டும்போது நிலைத்தடுமாறியதில் மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ மீது ஜீப் எதிர்பாராமல் மோதியது.
இதில் பயணம் செய்த வடமாநில கட்டிட தொழிலாளி பால்டுசென் (38), கமல் கேனாய் (32) மற்றும் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் லிங்கதுரை (42) ஆகிய 3 பேருக்கும் பலத்து காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை கண்டவர்கள் அங்கிருந்து 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பால்டுசென் பலியானார். மீதமுள்ள 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அகமது அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில், ஜீப் ஓட்டிய கார்த்திக் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.