"ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியதை பார்த்தேன்"-உறவினர் சாட்சியம்
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கியதை கதவு கண்ணாடி வழியாக நேரில் பார்த்தேன் என்று அவர்களின் உறவினர் மதுரை கோர்ட்டில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
மதுரை,
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கியதை கதவு கண்ணாடி வழியாக நேரில் பார்த்தேன் என்று அவர்களின் உறவினர் மதுரை கோர்ட்டில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
இந்த வழக்கில் சாத்தான்குளத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உறவினர் ஆஜர்
நேற்று நீதிபதி நாகலட்சுமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைதிகள் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்சின் உறவினர் தாவீது ஆஜராகி சாட்சியம் அளித்தார். அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போலீசார் தாக்கியதை பார்த்தேன்
கோர்ட்டில் தாவீது அளித்த சாட்சியத்தில், சம்பவத்தன்று சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கடுமையாக தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறல் சத்தம் வெளியில் கேட்டது. போலீஸ்நிலையத்திற்குள் நான் சென்று, அங்குள்ள கதவு கண்ணாடி வழியாக பார்த்தேன். அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் தாக்கியதை நேரில் கண்டேன்.
அந்த நேரம் வெளியில் இருந்து வந்த சில போலீசார், என்னை உடனடியாக வெளியே சென்று விடு. இல்லையென்றால் அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும், என எச்சரித்தனர். இதனால் போலீஸ்நிலையத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன்.
மறுநாள் காலையில் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அங்கு இருந்தேன். ஜெயராஜ், பென்னிக்சுக்கு சாப்பாடு கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. காயங்களுடன் அவர்கள் இருவரும் துடித்தனர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வாறு தாவீது சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்ஸ்பெக்டர் ஆஜராகிறார்
வருகிற 14-ந்தேதி கோவில்பட்டி கிழக்கு போலீஸ்நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த சுதீசன் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.