ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை - விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்


ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை - விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
x

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதே ஆண்டு நவம்பர் 25-ந் தேதி ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தனது வாக்குமூலத்தை சிறையில் இருந்தபடியே வக்கீல் மூலம் தாக்கல் செய்தார்.

அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்தநிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி இறுதி அறிக்கையை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

இந்த நிலையில், தமிழக மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 611 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி இரவு அவர் மரணம் அடைந்த தகவல் வெளியானது வரை நடந்த நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம் போன்ற சில உடல்நல குறைபாடுகளுக்கு அவரது வீட்டில் இருந்தவாறே, அவருக்கு தெரிந்த டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த டாக்டர்களில் சிலர் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்தவர்கள்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாததால் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார். தனக்கு உடல் உபாதைகள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர் கே.எஸ்.சிவகுமாரிடம் தெரிவித்துள்ளார். அவர் மற்ற சிறப்பு டாக்டர்களை தொடர்பு கொண்டு, மருந்து சீட்டு வழங்கக்கோரியுள்ளார். அதன் அடிப்படையில், ஜெயலலிதாவும் மருந்துகளை எடுத்து வந்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், தோல் வியாதி, தைராய்டு மற்றும் உடல் பருமன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும், அதற்குரிய சிகிச்சைகள் எடுத்து வந்தார் என்பதும் அறியப்படுகிறது.

டாக்டர் சாந்தாராம் மற்றும் பிற மூத்த டாக்டர்களால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதன்பிறகு அவர்கள் சசிகலாவால் மாற்றப்பட்டனர் என்பதும், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர்களாக வினோதன், ஹரிஹரன், சிவக்குமார் ஆகியோர் வந்தனர் என்பதும் தெளிவாகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி அவருக்கு காய்ச்சல் இருப்பதாக, இங்கு வேறு டாக்டர்கள் இருந்தபோதும் சபரிமலை சென்றிருந்த டாக்டர் சிவகுமாரை தொடர்பு கொண்டு சசிகலா தெரிவித்துள்ளார். அவரது பரிந்துரையின்படி, பாராசிடாமல் மாத்திரை மட்டும் வழக்கமான இடைவெளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத போதிலும், மறுநாள் (செப்டம்பர் 21-ந் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற புதிய மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் கலந்துகொண்டுள்ளார். இதுவே, ஜெயலலிதா கலந்துகொண்ட இறுதி விழா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விழாவில் கலந்துகொண்டுவிட்டு, வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, டிரைவரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், காரை நேரடியாக வீட்டுக்கு ஓட்டிச்செல்லும் படியும் கூறியுள்ளார். வீட்டுக்கு சென்ற ஜெயலலிதா, காரை விட்டு இறங்கியபோது, அவர் அணிந்திருந்த புடவை காலில் சிக்கியதால் நடப்பதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டு, விழும் நிலையில் இருந்து சமாளித்து வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அன்றைய தினம் வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை.

22-ந் தேதி இரவு 7 மணி அளவில் டாக்டர் சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா, ஜெயலலிதாவுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இரவு 8.45 மணிக்கு டாக்டர் சிவகுமார் போயஸ் கார்டன் வந்துள்ளார். அப்போது, ஜெயலலிதா படுக்கையில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கு இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது.

அப்போது, ஜெயலலிதாவிடம் டாக்டர் சிவகுமார் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அதற்கு அவர், நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், ஜெயலலிதா மூச்சுவிட சிரமப்படுவதை டாக்டர் சிவகுமார் கவனித்துள்ளார். உடனே, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வழங்கும் 'நெபுலைசர்' கருவியை கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

அப்போது, ஜெயலலிதா கழிவறைக்கு சென்றுள்ளார். அவருக்கு உதவியாக சசிகலாவையும் செல்லுமாறு டாக்டர் சிவகுமார் கூறியுள்ளார். கழிவறைக்கு வெளியே சசிகலா நின்று கொண்டிருந்தபோது, ஜெயலலிதா படுக்கைக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கடுமையாக இருமல் இருந்துள்ளது.

திடீரென ஜெயலலிதா, சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் மீது மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனே டாக்டர் சிவக்குமார், அப்பல்லோ மருத்துவமனை தலைவரின் மகள் பிரீத்தா ரெட்டியின் கணவர் விஜயகுமாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் அனுப்ப கோரியுள்ளார்.

அடுத்த 10 நிமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதேநேரத்தில், சசிகலாவும் பணிப்பெண்ணை அழைத்து காரை தயார் நிலையில் வைத்திருக்குமாறு டிரைவரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

ஆம்புலன்சில் வந்த டாக்டர் சினேகா ஸ்ரீ, உடனடியாக ஆக்சிஜனை கொண்டுவருமாறு கூறியுள்ளார். மயக்கமாக இருந்த ஜெயலலிதாவை நாற்காலியில் அமரவைக்க முயன்றபோது அவர் சரிந்தார். இதனால், ஸ்டெச்சரில் படுக்கவைக்கப்பட்டு, தூக்கிவந்து ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர். சசிகலா, டாக்டர் சிவகுமார் மற்றும் நர்சு ஒருவர் ஆம்புலன்சில் உடன் சென்றனர்.

ஆம்புலன்ஸ் 8 நிமிடங்களில் அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தவுடன், டாக்டர் சிவகுமார், மருத்துவ உதவி கேட்டபோதும், எந்தவொரு சிறப்பு டாக்டரையும் அனுப்பவில்லை என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறைக்குள் ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாகவும், ஆக்சிஜன் அளவு குறைவாகவும் இருந்துள்ளது. அங்கிருந்த டாக்டர்கள் குழுவினரால் ஜெயலலிதாவுக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈ.சி.ஜி., எக்கோ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக குழாய் பொருத்தப்பட்டபோது அவர் வலியால் கையை அசைத்துள்ளார். ஆனால், எதுவும் அவரால் பேச முடியவில்லை.தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, நவம்பர் 19-ந் தேதி சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு சசிகலா மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களின், அனைத்து ஒப்புதல் படிவங்களிலும் சசிகலாவே கையொப்பமிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையிலேயே காவிரி நதிநீர் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்துள்ளார். 45 நிமிடங்கள் இந்த கூட்டம் நடந்துள்ளது. அன்று இரவு ஜெயலலிதாவுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ந் தேதி முதல் ஜெயலலிதா செயற்கை சுவாசத்திலேயே இருந்து வந்துள்ளார்.

அக்டோபர் 1-ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே வந்து சிகிச்சை அளித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்து அழைத்து செல்ல ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாக்டர் சமின் ஷர்மாவை தொடர்பு கொண்ட டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர், ஆஞ்சியோ சிகிச்சை தேவையில்லை என்றும், பிறகு செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

இந்த நிலையில், அக்டோபர் 5-ந் தேதி எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது. ஆனால், ஜெயலலிதாவின் இதய நோயை கருத்தில்கொள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் போதுமான அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

அக்டோபர் 7-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு ஜெயலலிதா மூச்சுக்குழாயில் அறுவை சிகிச்சை மூலம் டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2 முறை எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து பார்த்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். டிசம்பர் 3-ந் தேதி இந்த கருத்தை எய்ம்ஸ் டாக்டர்கள் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து, டாக்டர்களின் கருத்துகளை கவனிக்க எய்ம்ஸ் டாக்டர்கள் தவறிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

தொடக்கத்தில் இருந்தே, ஜெயலலிதாவுக்கு இருந்த இதயக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆணையத்துக்கு சந்தேகம் உள்ளது. எந்தவொரு தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரும் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து இருந்தால், நிச்சயமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கும் என்று இந்த ஆணையம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்து மாறுபட்ட கருத்துகள் நீடித்தன. டாக்டர் ரிச்சர்ட் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் எழுத்துப்பூர்வமாக எதையும் அளிக்கவில்லை.

சாட்சிகள் மற்றும் மருத்துவமனை பதிவுகளின்படி, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ந் தேதி மாலை 4.20 மணிக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. விரைந்து சென்ற டாக்டர்கள் குழு, எக்மோ குழு வரும் வரை மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது. இதயத்துடிப்பும் குறைவாகவே இருந்துள்ளது.

மாலை 5.30 மணிக்கு எக்மோ கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 15 நிமிடங்களில் எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. அன்று இரவு 1 மணிக்கும், 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதாவின் இதயத்தில் சில நிமிடங்கள் ரிதம் கண்டதாகவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட பிறகு கண் இமைகளை திறந்து மூடினார் என்றும் டாக்டர் மினல் வோரா சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில், டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் மரணம் அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது உடலை 'எம்பாமிங்' செய்வதற்காக வந்த டாக்டர் சுதா சேஷய்யன், 10 மணி முதல் 15 மணி நேரத்துக்கு முன்பே மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார்.

4-ந் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை என்றும், ரத்த ஓட்டமும் இல்லை என்றும் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி டாக்டர்களின் தெளிவான சாட்சியங்களாகும்.

இந்த ஆணையத்தின் பார்வையில் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு மரணம் அடைந்தார். ஜெயலலிதா இறந்த நேரம் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணி என அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலித இறந்த நேரம் டிசம்பர் 4-ந் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும்.

அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை. டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?.

டாக்டர் சமின் ஷர்மா, ஆஞ்சியோ செய்வதைப்பற்றி விளக்கிய பின், டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?. இதனை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.

அனைத்து கருத்துகளில் இருந்தும் சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.

டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் பாபு ஆபிரகாம் ஆகியோர் தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதுகுறித்து அரசுக்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. அவரிடமும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும், செய்தியாளர் சந்திப்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டார். தனது அறையில் அவர் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும், ஜெயலலிதாவின் உடல்நல குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story