ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம்; நாளை நடக்கிறது.
ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நாளை நடக்கிறது.
ஸ்ரீரங்கம்:
பிரம்மோற்சவ விழா
பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
விழாவின் 4-ம் நாளான நேற்று மாலை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் கைலாச வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி கிளி வாகனத்திலும் வீதி உலா வந்தனர். 5-ம் நாளான இன்று மாலை சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இரவில் தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வருகின்றனர்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதற்கென நாளை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மகரலக்னத்தில் அதிகாலை 3.45 மணிக்குள் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளுகின்றனர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர் காலை 5.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடையும். பின்னர் காலை 8 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுப்பார்கள்.
மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய தேரோடும் நான்கு பிரகாரங்களில் சுற்றிவரும் தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்த பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலிப்பார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.