ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை நேற்று கொளுத்தப்பட்டது. இதனை அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதையொட்டி ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
அதனை ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கண்டருளுனினர். சுவாமி, அம்பாளுக்கும், முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். அங்கு ஏற்றப்படும் சொக்கப்பனையை சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கண்டருளுளினர்.
பின்னர் தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நீலிவனநாதர் கோவில்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபம் அருகே நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசாமி கோவிலிலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சப்தரிஷிஸ்வரர் கோவில்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் தனித்தனியே எழுந்தருளி காட்சி அளித்தனர். தொடர்ந்து மும்மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றதையடுத்து மும்மூர்த்திகள் புறப்பாடு கண்டு கோவிலை வலம் வந்தனர். அப்போது கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் பிரம்மாவும், மேற்கில் சிவனும் சொக்கப்பனை கண்டருளினர். இதைத்தொடர்ந்து மும்மூர்த்திகள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
லால்குடி சப்தரிஷிஸ்வரர் கோவிலில் சொர்க்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.