ஜமாபந்தி நிறைவு விழா: 555 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது. 555 பயனாளிகளுக்கு தீர்வு மூலம் ரூ.2 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழிகாட்டுதலின் படி, கடந்த 7-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (தேர்தல்) முரளி தலைமை தாங்கினார். திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து 1,649 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 555 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் என ரூ.2 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 122 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மீதமுள்ள 1,094 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் போன்ற ஆணைகளை எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், திருவள்ளூர் ஒன்றிய தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் காக்களூர் ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால், மோவூர் டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.