சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ந் தேதிஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் மனு
சேந்தமங்கலத்தில் மார்ச் மாதம் 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு
சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேந்தமங்கலம் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழா சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் சார்பில் தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் 3-ந் தேதி சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த விழா தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
குடிநீர் பற்றாக்குறை
இதேபோல் கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேந்தமங்கலம் தாலுகா வாழவந்திகோம்பை ஊராட்சி காரவள்ளி கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் கிணறு வெட்டப்பட்டது. ஊராட்சி மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
குடிநீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.4½ லட்சம் மதிப்பில் கிணறு ஆழப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2017- –2018-ம் ஆண்டில் 14-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.2.65 லட்சத்தில் கிணறு தூர்வாரப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
இந்நிலையில் சிலர் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றதுடன், மின் இணைப்பையும் துண்டித்து உள்ளனர். இங்குள்ள 90 குடும்பங்களுக்கும், கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த பொதுக்கிணறு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. எனவே தற்போது குடிநீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்களும், சுற்றுலா பயணிகளும், பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.