ஜல்லிக்கட்டு வீரர் படுகொலை
குஜிலியம்பாறை அருகே ஜல்லிக்கட்டு வீரரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி குட்டையில் உடலை வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குட்டையில் ஆண் பிணம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. தற்போது கல்குவாரி செயல்படாமல் இருக்கிறது. இந்த கல்குவாரியில் குட்டை ஒன்று உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குட்டையில் ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் குஜிலியம்பாறை போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இரவு 9 மணியில் இருந்து கல்குவாரி குட்டையில் இறங்கி உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் உடலை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
கொடூர கொலை
பின்னர் மின்விளக்கு உதவியுடன் உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. அந்த உடலுடன் சேர்த்து கல் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. மேலும் இறந்தவரின் கை, கால்கள் மற்றும் வாய்ப்பகுதியும் கட்டப்பட்டு் இருந்தது. இதையடுத்து அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசி இருக்கலாம் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இறந்தவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ராமு பாய்ஸ், கேஜிஎம் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதனை வைத்து சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜல்லிக்கட்டு வீரர்
விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பனின் மகன் மணி (வயது 23) என்றும், ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு வீரரான மணி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி வந்துள்ளார். எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதேனும் காதல் பிரச்சினையில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு வீரரை கொடூரமாக கொலை செய்து குட்டையில் உடலை வீசி சென்ற சம்பவம் குஜிலியம்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.