லால்குடி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர் சாவு

திருச்சி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர் நேற்று காலை இறந்தார். அவர் கொடுத்திருந்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர் நேற்று காலை இறந்தார். அவர் கொடுத்திருந்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சொத்து பிரச்சினை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் இடையே நீண்டகாலமாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
கடந்த 25-ந்தேதி ராஜா மற்றும் நிர்மல் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராஜாவின் மனைவி விஜயா, நிர்மலின் மனைவி ஜெனித்தா ஜாக்குலின் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், லால்குடி சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் விசாரணை நடத்தினார்.
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு
இதனைத் தொடர்ந்து, ராஜா, நிர்மல் ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் ராஜா மீண்டும் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, இந்த பிரச்சினையில் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராஜா போலீஸ் நிலையம் முன்பு நின்றபடி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பிடித்ததும் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், ராஜா உடல் முழுவதும் கருகியது. உடனே லால்குடி போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவுக்கு 84 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிறைக்காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தீக்குளித்த சிறைக்காவலர் ராஜா இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காத லால்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரையின் பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.