ராகுல்காந்திக்கு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு; மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல்காந்திக்கு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு காரணமாக மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி கர்நாடகாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சூரத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்களை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் மோகன் வெங்கடேசன், வட்டார தலைவர்கள் சிவக்குமார், கந்தவேல், நிக்கோலஸ், ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் அருள்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.