வக்கீல் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை
அரசு அதிகாரிகளை தாக்கிய வழக்கில் வக்கீல் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வள்ளியூர் (தெற்கு):
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தை அர்ஜூனன் (வயது 70), வழக்கறிஞர் ரசல்ராஜ் (48), செந்தில்குமார் (34), கனி பாய் (63) ஆகியோர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை வருவாய் துறையினர் பலமுறை எச்சரித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் கடந்த 6.2.2008-ம் ஆண்டு உதவி செயற்பொறியாளர் சுந்தர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றச் சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் உதவி செயற்பொறியாளர் சுந்தர், போலீசார் வின்சென்ட், சுந்தரம் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பத்மநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ரசல்ராஜ் வழக்கறிஞர் என்பதால் வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பானது வெளியானது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜூனன், வழக்கறிஞர் ரசல்ராஜ், செந்தில்குமார், கனி பாய் ஆகிய 4 பேருக்கும் கொலை முயற்சி வழக்கில் 6 ஆண்டு சிறையும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் ஓராண்டு சிறையும், 4 பேருக்கு தலா ரூ.300 அபராதமும் விதித்து நீதிபதி பர்ஷத் பேகம் தீர்ப்பளித்தார்.