அண்ணனுக்கு ஆயுள் தண்டனை, தம்பிக்கு 6 மாதம் ஜெயில்


அண்ணனுக்கு ஆயுள் தண்டனை, தம்பிக்கு 6 மாதம் ஜெயில்
x

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக உளியால் வாலிபரை குத்தி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், தம்பிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக உளியால் வாலிபரை குத்தி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், தம்பிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தீபாவளி

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரபுதேவா (வயது20). இவரும் அதேபகுதி சத்யாநகரை சேர்ந்த தங்கமணி மகன் சிலம்பரசன் (24) உள்ளிட்ட நண்பர்களும் அந்த பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி தீபாவளி அன்று மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு அய்யப்பன்நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல் (24) என்பவர் சென்றுள்ளார். அவரை வழிமறித்த மேற்கண்டவர்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தங்களின் நண்பரை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டு தாக்கி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்து சென்று தனது தம்பி வாசுதேவன் (21) மற்றும் சிவராமன் மகன் விக்னேஸ்வரன் (20), அவ்வை தெரு மாரிமுத்து மகன் பாலமுருகன் ஆகியோரை அழைத்து வந்து பிரபுதேவா, சிலம்பரசன் தரப்பினரை தாக்கி உள்ளனர். உளியால் பலமாக தாக்கியதில் சிலம்பரசன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக பிரபுதேவா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேல், வாசுதேவன், விக்னேஸ்வரன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சீனிவாசன் மேற்கண்ட சக்திவேலுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். அவரின் தம்பி வாசுதேவனுக்கு 6 மாதம் சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் அதனை கட்ட தவறினால் 1 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

இந்த வழக்கில் விக்னேசுவரன், பாலமுருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வாசுதேவன் ஆயிரம் அபராதத்தை செலுத்தி ஜாமீனில் சென்றார். அவரின் அண்ணன் சக்திவேல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார்.


Next Story