ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
x

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிவகங்கை மாவட்டத்தில் 10 இடத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை


ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிவகங்கை மாவட்டத்தில் 10 இடத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்

ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்புவிப்பு விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ரஞ்சித்குமார், வளனரசு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்ககள் கலந்து கொண்டனர்.

இளையான்குடி

இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவர் ஜான்சன் அந்தோணி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியப்பன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் மற்றும் கல்லல் பகுதியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் டேவிட் அந்தோணிராஜ், பழனியப்பன், ரீகன் ஆகியோர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் தொடங்கி வைத்தார்.

சிங்கம்புணரி-மானாமதுரை

சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.புதூரில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், ஜெயபிரகாஷ், குமரேசன் ஆகியோர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் தேவகோட்டை காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story