சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு


சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு
x

சென்னையில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

சென்னை

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம், சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளருமான கு.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் தியாகராஜன் கூறியதாவது:-

10-ந்தேதி மாநாடு

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பில் வருகிற 10-ந்தேதி சென்னையில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதில் ஒட்டுமொத்த தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது என இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

ஆணையர் பதவி ரத்து

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாங்க 101, 108 ரத்து, ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் முதல்-அமைச்சர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்துகிறோம்.

கல்வித்துறைக்கு தொடர்பு இல்லாத ஆணையர் பணியிடத்தை கொண்டு வந்த நாள் முதல் எங்கள் சங்கத்தையும், நிர்வாகிகளையும் எதுவும் கேட்பதில்லை. ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளால்தான் கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் வருகிறது.

எனவே இந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இயக்குனர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம் கொண்டுவர வேண்டும். ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story