ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

மனித சங்கிலி போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி அருகே தொடங்கிய இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரபாண்டியன், குமரி அனந்தன், செல்வராஜ், பிரபாகரன், மரியதாஸ், அருள்ஜோதி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக வரிசையாக நின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கோஷங்கள் எழுப்பினர்

இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story