தனியார் ஆலையில் பதுக்கி வைத்திருந்த8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ேவதாரண்யம் அருகே தனியார் ஆலையில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ேவதாரண்யம் அருகே தனியார் ஆலையில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துணை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
10 டன் ரேஷன் அரிசி
அப்போது அந்த வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேனை போலீசார் மறித்து டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகை மூலக்கரை பகுதியில் இருந்து நாமக்கலில் உள்ள கோழி பண்ணைக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.
மேலும் நாகை மூலக்கரையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களை மூலக்கரையில் உள்ள ஆலைக்கு போலீசார் அழைத்து சென்று பார்த்த போது அங்கு 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
6 பேர் கைது
இதையடுத்து தனியார் ஆலையில் இருந்த 8 டன் ரேஷன் அரிசியையும், சரக்கு வேனில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் பிச்சன் கோட்டம் பகுதியை சேர்ந்த தனியார் அரவை ஆலை உரிமையாளர் பாலமுருகன் (வயது 46), திருச்சி சிங்காதோப்பு பகுதியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் மணிகண்டன் (21), மினிலாரி டிரைவா் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (48), நூர்தீன் (28), திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (28), திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஆதிஸ் முகமது (24) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, சரக்குவேன், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.