ராஜபக்சேவின் சர்வாதிகார முடிவினால்தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது; இலங்கை எம்.பி. பேட்டி
ராஜபக்சேவின் சர்வாதிகார முடிவினால்தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என்று இலங்கை எம்.பி. கூறினார்.
துறையூர்:
துறையூரை அடுத்துள்ள கீரம்பூர் கிராமத்தில் இருந்து செங்காட்டுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் பிச்சாயி அம்மன், வீரபத்திரசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலுக்கு இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ய வந்தார். இந்த கோவில் இவருக்கு குலதெய்வ கோவில் ஆகும். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், இலங்கையில் ராஜபக்சே அரசு கொண்டு வந்த 20-வது சட்ட திருத்தத்தினால் அனைத்து அதிகாரங்களும் பிரதமரிடத்தில் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ராஜபக்சே எடுத்த சர்வாதிகார முடிவினால்தான் இலங்கை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பெட்ரோல், டீசல், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இலங்கை மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெறக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். இலங்கையில் தற்போதுள்ள நிலைமையை சரி செய்ய தமிழக அரசும், இந்திய அரசும் போதுமான நிவாரண உதவிகளை செய்து வருவதற்கு இலங்கை மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள், என்றார்.