5 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு


5 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு
x

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 5 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் வட்டாரம் சார்பில் உலக மகளிர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆசிரியர்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்க பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 30 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஊக்க ஊதியம் குறித்த அறிவிப்பினை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் அடங்கிய இருபது அம்ச கோரிக்கை குறித்து முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐந்து கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளோம். முதல் கட்டமாக அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு செல்வது, வருகிற 18-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம். எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்ற சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.


Next Story