இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு


இளையவர் வாங்கும் சம்பளத்தை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு ஊழியர்களில் பணியில் இளையவர் அதிக சம்பளம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் 1988-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். இதற்கு மறுநாள், அதாவது அதே ஆண்டு ஜூலை 21-ந் தேதி செல்லப்பாண்டியன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 2002-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2008-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன்.

ஆனால், செல்லப்பாண்டியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 2008-ம் ஆண்டுதான் பதவி ஏற்றார். என்னைவிட பணியில் அவர் இளையவர். ஆனால், 2008-ம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சிறப்பு நிலை ஊதியம் உயர்வு வழங்கும்போது, என்னைவிட அவருக்கு ரூ.3 ஆயிரம் அதிகம் ஊதியம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து நான் அளித்த மனுவை நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிராகரித்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.காசிநாதபாரதி, மனுதாரரைவிட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற செல்லப்பாண்டியன் ஊதியம் அதிகம் வாங்கியது மட்டுமல்ல, தற்போது அவர் வட்டார கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று விட்டார்'' என்று வாதிட்டார். கல்வி துறை சார்பில் அரசு வக்கீல் சி.சதீஷ் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், ''நாகை தொடக்க கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு பணி விதிகளின்படி, ஒரே பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்களில், இளையவரைவிட பணியில் மூத்தவர் குறைவாக ஊதியம் வாங்கக்கூடாது. ஒருவேளை இளையவர் அதிக ஊதியம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

எனவே, 2008-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story