உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு என தகவல்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எடப்படாத நிலையில் வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கடந்த 2 நாட்களாக, சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வாகனங்களும், சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.
அரசு சார்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் மூன்றாவது நாளாக ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்றதால், சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.