சென்னை எண்ணூரில் இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்
எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஐ.ஐ.டி. பேராசிரியர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த எண்ணெய் கசிவு பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து கடலில் கலந்ததால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இந்த எண்ணெய் கசிவை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகளை சி.பி.சி.எல். நிறுவனம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து மொத்தமாக எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஐ.ஐ.டி. பேராசிரியர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.