அரசு போக்குவரத்துக்கழகத்தில் சீனியர்களை காட்டிலும் ஜூனியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் சீனியர்களை காட்டிலும் கூடுதல் சம்பளத்தை ஜூனியர்களுக்கு வழங்குவதை ஏற்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் சீனியர்களை காட்டிலும் கூடுதல் சம்பளத்தை ஜூனியர்களுக்கு வழங்குவதை ஏற்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விரைவில் ஓய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கல்குறிச்சியைச் சேர்ந்த ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் கடந்த 1988-ம் ஆண்டு டிரைவராக சேர்ந்தேன். 2018-ல் டிரைவர் பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றேன். தற்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 35 ஆண்டுகள் பணியாற்றி, வருகிற 31-ந்தேதி ஓய்வு பெற உள்ளேன். நான் டிரைவர் பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்ற போது, என்னை காட்டிலும் ஜூனியர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் கூடுதலாக சம்பளம் வழங்கியது தெரிந்தது.
ஒரே பணியில் ஈடுபடும்போது, சீனியரை விட ஜூனியருக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதை ஏற்க இயலாது. இதுகுறித்து பல்வேறு உத்தரவுகளும் உள்ளன. எனவே இதுபோன்ற சம்பள முரண்பாடுகளை சரிசெய்யும்படி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தேன். உரிய நடவடிக்கை இல்லை. எனவே எனக்கும், பணியில் ஜூனியருக்கும் இடையிலான சம்பள முரண்பாட்டை சரி செய்ய உத்தவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஒப்பந்த மீறல்
இதேபோல ஆசாரிபள்ளத்தை சேர்ந்த மணிகுமார் தாக்கல் செய்த மனுவில், போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறேன். வருகிற செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளேன். என்னை விட பணியில் ஜூனியர் ஒருவர் கூடுதல் சம்பளம் பெற்று வருகிறார். இதை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, சம்பள முரண்பாடு தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதை மீறும் வகையில் மனுதாரர்களுக்கு அவர்களின் ஜூனியரை காட்டிலும் குறைவான சம்பளம் வழங்குவது சட்டவிரோதம் என வாதாடினார்.
ஏற்புடையதல்ல
விசாரணை முடிவில், பணியில் சீனியர்களை விட ஜூனியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே மனுதாரர்களின் மனுக்களை ஏற்று, அவர்களின் சம்பள முரண்பாட்டை அரசு போக்குவரத்துக்கழகம் சரிசெய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.