ஆதார் எண்ணை 30-ந் தேதிக்குள் உறுதி செய்வது அவசியம்


ஆதார் எண்ணை 30-ந் தேதிக்குள் உறுதி செய்வது அவசியம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.எம்.கிசான் திட்ட தவணைத்தொகை பெற ஆதார் எண்ணை 30-ந் தேதிக்குள் உறுதி செய்வது அவசியம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.எம்.கிசான் திட்டம்

தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம். நடப்பாண்டில் 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான 13-வது தவணைத்தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் எண் உறுதி

எனவே பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் எண் மூலமாகவோ தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது செல்போனில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச்சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.எனவே இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருக்கும் பயனாளிகள் வருகிற 30-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story