தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது மகிழ்ச்சி; முதல்-அமைச்சர் பெருமிதம்


தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவது மகிழ்ச்சி; முதல்-அமைச்சர் பெருமிதம்
x

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறினார்.

சென்னை,

'தி இந்து' குழுமத்தின் சார்பில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தென்னக விளையாட்டு மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய பெருமை

வருகிற ஜூலை 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல் முறையாக நம்முடைய சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது.

2022-ம் ஆண்டிற்கான போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷியாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்த போட்டியை தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன.

செஸ் ஒலிம்பியாட்

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போது நமது அரசு உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால் அந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் நடப்பது இது முதல்முறை என்பதையும், அதையும் தாண்டி பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், அந்த முதல் முறையும் நம்முடைய தமிழ்நாட்டில் நடப்பதுதான் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி.

ரூ.92.13 கோடி நிதி ஒதுக்கீடு

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து அந்த போட்டிக்கு, நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்கள். இதனால் சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப்போகிறது.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை நடத்துவதன் மூலமாக நம்முடைய தமிழக அரசு பெருமை அடைகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்காக மாநில அரசு ரூ.92 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறது.

நானும் கிரிக்கெட் வீரர்தான்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை (லோகோ) மற்றும் சின்னத்தை சில வாரங்களுக்கு முன்னால் நான் வெளியிட்டேன். சதுரங்க விளையாட்டில் இருக்கக்கூடிய 'நைட்' போலவே ஒரு குதிரை வடிவமைக்கப்பட்டு, அது வணக்கம் சொல்லும் வகையில் காணப்பட்டது. தமிழ் முறைப்படி அது வேட்டி-சட்டை அணிந்துகொண்டு, அதற்கு தம்பி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவற விடமாட்டேன். பள்ளிக்காலம் முதல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கக்கூடியவன். மேயரானபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன்.

கருணாநிதியின் கிரிக்கெட் ஆர்வம்

எத்தகைய பணிச்சூழல்கள் இருந்தாலும் மறைந்த நம்முடைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதியும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவார். விளையாட்டு போட்டிகள் என்பது, விளையாடுபவர்களை மட்டுமல்ல, போட்டிகளை பார்ப்பவர்களையும் உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமாக, தாராளமாக நிதி உதவிகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது, செய்யவும் போகிறது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட நிலையை இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம்.

சர்வதேச விளையாட்டு வீரர்கள் உருவாக்கம்

தமிழக விளையாட்டுத்துறை மிகமிக வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். இத்தகைய விளையாட்டு வீரர்களை தேடியும், உருவாக்கியும் வருகிறது நம்முடைய அரசு. இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

நமது மாநிலத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தவும், அனைத்து விளையாட்டுகளையும் மேம்படுத்தவும் இங்கேயே சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, 'தி இந்து' குழுமத்தின் இயக்குனர் முரளி, அதன் தலைவர் மாலினி பார்த்தசாரதி, இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தலைவர் என்.சீனிவாசன், 'ஸ்போர்ட்ஸ் ஸ்டார்' இதழின் ஆசிரியர் அயோன் சென்குப்தா, முதன்மை செயல் அலுவலர் நவநீத், சர்வதேச சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story