டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிக்கிறது
டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிக்கிறது என்று அவரது பெரியப்பா கூறினார்.
லால்குடி:
லால்குடியை சேர்ந்தவர்
நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. டைரக்டர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து திருச்சி மாவட்டம் லால்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆவார். விக்னேஷ் சிவனின் தாய் மீனாகுமாரி. இவர்கள் பணி நிமித்தமாக கடந்த 1971-ம் ஆண்டே சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். சிவக்கொழுந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மீனா குமாரி சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். சிவக்கொழுந்து இறந்துவிட்டார்.இந்நிலையில் நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்தது பற்றி, லால்குடியில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் (வயது 78) கூறியதாவது:-
சொந்த குழந்தைபோல்...
எனது பெற்றோருக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். நான் தான் குடும்பத்தில் மூத்தவன். பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். விக்னேஷ் சிவனின் தந்தை, எனக்கு அடுத்து பிறந்தவர். ஒன்றாகக் கூட்டுக்குடும்பாக வசித்த நாங்கள், பின்னர் திருமணம் மற்றும் வேலை நிமித்தம் காரணமாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். எனது மனைவி பிரேமா. குழந்தை பாக்கியம் இல்லாத நாங்கள், என்னுடைய தம்பி குழந்தைகளான விக்னேஷ் சிவனையும், ஐஸ்வர்யாவையும் எங்களது சொந்தக் குழந்தை போலவே பாவித்தோம். எனது தம்பி இறந்த பிறகு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட யாரிடமும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
வருத்தத்தை ஏற்படுத்துகிறது
மேலும் விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும், எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியது. மேலும் எங்களை திருமணத்திற்கும் அழைக்கவில்லை. அவர்கள் வந்தால் வழங்க பரிசுப்பொருளை தயார் செய்து காத்திருந்தோம்.எங்கள் வீட்டின் வழக்கப்படி எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு குளிகை நேரத்தில் வீட்டிலேயே நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு நடத்தப்பட்டால் விசேஷங்கள் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம். ஆனால் விக்னேஷ் சிவனின் திருமணம் அவ்வாறு நடைபெறவில்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர் உள்ளனர். அவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் நடைபெற்றது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.