சத்குரு ஜக்கிவாசுதேவுக்கு சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு
மண்வளம் காப்போம் திட்டத்துக்கு ஆதரவு திரட்ட 27 நாடுகளுக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற சத்குரு ஜக்கிவாசுதேவுக்கு சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
மண்வளம் காப்போம் திட்டத்துக்கு ஆதரவு திரட்ட 27 நாடுகளுக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற சத்குரு ஜக்கிவாசுதேவுக்கு சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிள் பயணம்
கோவை ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மண்வளம் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட 27 நாடுகளுக்கு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டார். மோட்டார்சைக்கிளிலேயே இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், அசர்பைஜான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு, அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு நாடுகளுக்கு சென்று மண் வளம் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மோட்டார்சைக்கிளிலேயே 27 நாடுகளுக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார்.
உற்சாக வரவேற்பு
அதன்பின்னர் ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக கடந்த மாதம் இந்தியா வந்த ஜக்கிவாசுதேவ் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழகத்தை வந்தடைந்தார். நேற்று கோவை ஈஷா மையத்துக்கு திரும்பினார்.
முன்னதாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்தபோது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி கோவில் அருகே பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சலங்கை ஆட்டத்துடன் பல்வேறு இசைகள் முழங்க பூரண கும்ப மரியாதையும் கொடுக்கப்பட்டது.
ரோஜா பூக்களால் பாதை
பண்ணாரியில் உள்ள முருகன் கோவில் அருகில் பள்ளி குழந்தைகள், சிக்கரசம்பாளையம் பகுதியில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தன்னார்வலர்கள், கோம்புபள்ளத்தில் ஈரோட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தில் வணிகர் சங்கம், சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையத்தின் முன்பு சத்தி மற்றும் பவானி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள், எஸ்.ஆர்.டி. பகுதியில் கோபி மற்றும் பெருந்துறை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், செண்பகப்பூதூரில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள், நல்லூர் பகுதியில் பொதுமக்கள், புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டியில் ஜக்கிவாசுதேவ் வரும் வழியில் ரோஜா பூக்களால் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கைலாய வாத்தியங்கள் முழங்க வரவேற்றார்கள்.