ஒரு முதல்-மந்திரியை இப்படித்தான் நடத்துவீர்களா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


ஒரு முதல்-மந்திரியை இப்படித்தான் நடத்துவீர்களா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
x

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளேன். பா.ஜனதா மற்றும் பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள் 10 முதல் 20 நிமிடம் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்கள் வரை பேசினார். அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரிகள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்-மந்திரிகளில் நான் மட்டுமே பங்கேற்றேன். ஆனாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் என்னிடம் பாரபட்சம் காட்டினார்கள். வெறும் 5 நிமிடம் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடத்துக்கு மேல் பேசியபோது மைக்கை ஆப் செய்தனர்" என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா..? ஒரு முதல்-மந்திரியை இப்படித்தான் நடத்துவதா..?

எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜனதா அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சிக்கு தத்துவத்தில் எதிர்க்கட்சிகளின் உரையாடல்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Next Story