ராஜபாளையம் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?


ராஜபாளையம் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் மாந்தோப்புக்கள் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. அதிலும் ராஜபாளையம் பகுதியில் விளையும் பஞ்சவர்ணம், சப்போட்டா ரக மாம்பழங்கள் மாம்பழச் சந்தையில் பிரசித்தி பெற்றவையாகும்.

அதற்கு காரணம் இந்த மாம்பழங்களின் ருசி தான். இப்பகுதி விவசாயிகள் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றால் இந்த ரக மாம்பழங்களின் விற்பனைச்சந்தை விரிவடைய வாய்ப்புள்ளது என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.

புவிசார் குறியீடு

பொருட்களுக்கான புவிசார் குறியீடு சட்டம் கடந்த 1999-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த விளைப்பொருள்களுக்கு அதன் தனித்தன்மையும் சிறப்பையும் அங்கீகரிக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் அந்த பொருளினை வேறு வகையிலோ அல்லது போலியாகவோ அதன் பெயரை பயன்படுத்தி சந்தைப்படுத்துவதை சட்டபூர்வமாக கட்டுப்படுத்த முடியும். விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை மல்லிகையும் புவிசார்குறியீடு பெற்றுள்ளது.

அரசிடம் முறையீடு

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா மிளகாய் வத்தலுக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் பரவலாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்ற இந்த கருத்து மாவிவசாயிகள் மத்தியிலேயே பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் விவசாயத் துறை செயலாளர் ஆகியோருக்கு பலமுறை முறையிட்டுள்ளனர்.

ஆனாலும் சாதகமான பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அரசு வேளாண் பல்கலைக்கழகமும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி யாயினும் பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்று தர வேண்டும் என்ற மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமும், அத்தியாவசியமும் ஆகும்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விவசாயிகளுக்கு பலன்

விஜயமுருகன் (மாநில நிர்வாகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):-

தமிழகத்தில் சேலம் மாம்பழத்திற்கு இணையாக உள்ளது ராஜபாளையம் பஞ்சவர்ணம் ரகம் ஆகும். இந்த மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாதநிலை உள்ளது.

எனவே தற்போது வேளாண் பல்கலைக்கழகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் வேளாண் பல்கலைக்கழகம் இதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி பஞ்சவர்ணம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்று தர வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் பஞ்சவர்ண மாம்பழச்சந்தை மாவட்ட மாநில அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மாம்பழ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பலன் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருந்து உணவு

ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி முருகேசன்:-

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மா பயிர் செய்துள்ளனர். இங்கு சப்பட்டை, பஞ்சவர்ணம், ஆரா, கிளி மூக்கு, போன்ற மாவிளச்சல் அதிகரிக்கும்.

ராஜபாளையம் பகுதியில் பங்குனி, சித்திரை மாதங்களில் அதிக அளவிலான மாம்பழ விளைச்சல் விளைகிறது. இந்த மா விளைச்சலை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இதில் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையது. இங்கு விளையக் கூடிய மாம்பழங்களை நம் முன்னோர்கள் மற்றவர்களுக்கு விருந்து அளிக்கும் போது உணவுடன் தவறாமல் மாம்பழம் இருக்கும். தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். இங்கு விளையும் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

விருதுநகர் மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் கர்ணன்:-

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் சப்போட்டா, மாம்பழங்கள், பஞ்சவர்ண ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.

இப்பகுதியில் இருந்து மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அரசு வேளாண்மை உற்பத்தி சங்கங்களின் மூலம் மாம்பழங்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு நேரடி ஏற்றுமதி சேவையை தொடங்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்பு

விருதுநகர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன்:- விருதுநகர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பஞ்சவர்ணம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள்நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போது மதுரை வேளாண் கல்லூரியில் ராஜபாளையம் பஞ்சவர்ணம் மாம்பழ ரகத்திற்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனுடன் அதலைக்காய், கொடுக்காப்புளி ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உறுதியாக பஞ்சவர்ண மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு பகுதியில 800 ஏக்கர் நிலப்பரப்பில் பஞ்சவர்ணம் மாம்பழம் சாகுபடி நடைபெறும் நிலை உள்ளது. புவிசார் குறியீடு வழங்கப்படும் நிலையில் இந்த சாகுபடி பரப்பினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Next Story