தையல் தொழில் நலிவடைகிறதா?


தையல் தொழில் நலிவடைகிறதா? என கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமேடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.

ஆயத்த ஆடைகள்

குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடிமுன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.

இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

அதேநேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சித்திர வேலைப்பாடுகள்

அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக்கடைகள் முளைத்திருக்கின்றன. திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள்.

'ஆரி ஒர்க்' என்று இதைச்சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல, ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம்.

எனவே தையல் தொழில் நசிந்து வருகிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தையல் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும்

திருத்தங்கல் தையல் பயிற்சியாளர் பாத்திமா:-

ரெடிமேடு ஆடைகளின் வருகைக்கு பின்னர் தையல் தொழில் நலிவடைந்துவிட்டது. பெரும்பாலான ஆண் டெய்லர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து விட்ட நிலையில் ஆண்கள் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் ரெடிமேடாக விற்பனை செய்யப்படுகிறது.

10 சதவீதம் பேர் மட்டுமே தையல்கடைகளில் தைத்து பயன்படுத்துகிறார்கள். கடந்த காலங்களை விட தற்போது தையல் தொழிலில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். நன்கு பயிற்சி பெற்ற பெண் தையல் தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.200 முதல் ரூ.400 வரை சம்பளமாக கிடைக்கிறது. பலர் வீடுகளில் இருந்த படியே தையல் தொழில்களை செய்து வருகிறார்கள். தற்போது அரசு தையல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் பெண்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள். சமூக நலத்துறை சார்பில் விதவைகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுவது போல் கல்லூரி படிப்பு முடித்து உரிய தையல் பயிற்சி வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு அரசு இலவச தையல் எந்திரம் வழங்கினால் பலருக்கு உதவிகரமாக இருக்கும். கடந்த 30 ஆண்டுகளாக பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வருகிறேன். தையல் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் ஜவுளி வியாபாரி ராமகிருஷ்ணன்:- மக்கள் என்னதான் ரெடிமேடு ஆடை விரும்பி வாங்கினாலும் ஒரு சிலர் இன்னும் தையல்கடைக்கு சென்று தைத்து அணிவதை தான் விரும்புகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரெடிமேடு ஜவுளி வியாபாரம் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் ஜி.எஸ்.டி. போன்ற வரி விதிப்பால் எங்களை போன்ற சிறு அளவில் ரெடிமேடு ஜவுளி வியாபாரம் செய்பவர்கள் சற்று பாதிப்பு அடைகின்றனர்.

இளைஞர்களின் விருப்பம்

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவர் அருண்குமார்:- முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களுக்கு 20 நாட்களுக்கு முன்பு துணி எடுத்து நாங்கள் விரும்பும் வகையில் ஆடை தைப்போம். ஆனால் காலத்திற்கு ஏற்ப தற்போது அனைவரும் ரெடிமேடு ஆடைகளை விரும்புகின்றனர். ரெடிமேடு ஆடைகள் பல டிசைன்களில் கிடைக்கின்றது. அதுமட்டும் அல்லாமல் ரெடிமேடு சட்டைகள் ரூ.100 முதல் கிடைக்கிறது. ஆனால் தற்போது தையல் கூலி மிக அதிகமாக உள்ளது. ரெடிமேடு ஆடையை விட தையல் கூலி மீது அதிகமாக உள்ளது. மேலும் ஒரே மாதிரியாகவே தையல் கடைகளில் சட்டைகள் தைக்கப்படுகின்றன.அதற்கு காலதாமதமும் ஆகின்றது. ஆதலால் இளைஞர்கள், மாணவர்கள் பெரும்பாலானோர் ரெடிமேடு ஆடைகளை விரும்புகின்றனர்.

பாதிப்பு இல்லை

விருதுநகரை சேர்ந்த ஆயத்த ஆடை வணிகர் சம்சுல்ஆரிப்:-

ஆயத்த ஆடை வணிகம் என்பது மக்களிடையே தேவை ரசனைக்கேற்ப ஆடைகளை உடனடியாக வாங்குவதற்கான வசதியை செய்து தருகிறது. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் வணிகத்தினால் எங்களை போன்ற ஆயத்த ஆடை கடைகள் வைத்து வணிகம் செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வணிகத்தால் தையல் தொழில் செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. நகர்ப்புறங்களிலும் பெருநகரங்களிலும் தையல் தொழில் செய்வோருக்கு தேவை அதிகமாகத்தான் உள்ளது. ஆயத்த ஆடை மொத்த வணிகம் செய்வோர் ஆயத்த ஆடை தயாரிப்பதற்கு தையல் தெரிந்த நபர்கள் கிடைப்பதில்லை என்றுகூறும் நிலையே உள்ளது.

விருதுநகர் போன்ற நகர்ப்புறங்களிலும் சிறு அளவில் ஆயத்த ஆடை தயாரிப்போர் உள்ளனர். அவர்களும் தையல் தொழில் தெரிந்தவர்களை தான் நம்பி உள்ள நிலை உள்ளது. எனவே எந்த வகையில் பார்த்தாலும் ஆயத்த ஆடை வணிகத்தால் தையல் தொழிலுக்கு பாதிப்பு என்பது இல்லை. தற்போது உள்ள நிலையில் பெண்களுக்கான சட்டை தைப்பதில் இருந்து ஆண்களுக்கான உடைகள் தைப்பது வரை பல்வேறு டிசைன்கள் வந்துவிட்ட நிலையில் அதை தைத்துக் கொடுப்போருக்கு நல்ல கூலி கிடைக்கும் நிலையே உள்ளது. அவசர தேவைக்கு ஆயத்த ஆடை கடைகளை தேடி வரும் நிலை உள்ளது. எனவே இத்தொழிலால் தையல் தொழிலுக்கு பாதிப்பு இல்லை.

வாழ்வாதாரம்

வத்திராயிருப்பை சேர்ந்த டெய்லர் ஞானகுரு:-

ரெடிமேடு ஆடை வருகையால் நாளுக்கு நாள் தையல் தொழில் மிகவும் மோசமான நிலைமையை சந்தித்து கொண்டு செல்கிறது. பெண்களுக்கு பல்வேறு மாடல்களில் ரெடிமேடு ஆடைகள் வருகை அதிகரித்து கொண்டு செல்வதால் துணியாக எடுத்து தைப்பது முற்றிலுமாக பெண்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் தையல் தொழிலை நம்பி உள்ள பெண்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி செல்கிறது. இதனால் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமம் அடையக் கூடிய சூழ்நிலையும் உருவாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்னதான் ரெடிமேடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.


Next Story