பிரதமர் தெரிவித்த யோசனை 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா? - ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து


பிரதமர் தெரிவித்த யோசனை ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா? - ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து
x

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே போலீஸ் சீருடை

மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை



ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது



ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.

இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

நலத்திட்டங்களில் மாற்றங்கள்



ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., எம்.சி.சாரங்கன்:- நாடு முழுக்க ஒரே போலீஸ் சீருடை என்பது தேவை இல்லாதது. அதனால் எந்தவித பலனும் ஏற்படப்போவது இல்லை. போலீஸ் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மைக்கு ஏற்ப மாநில அரசுகள் போலீஸ் சீருடையை வடிவமைத்து உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் காக்கி சீருடைதான் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 படை பிரிவுகளில் ஒரே சீருடையை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். சீருடையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு பதிலாக போலீசாருக்கான நலத்திட்டங்களில் நல்ல மாற்றங்கள் கொண்டுவரலாம். ஒரே மாதிரியான நல்ல சம்பளம், போலீசாரின் எண்ணிக்கை உயர்வு போன்றவற்றில் அக்கறை காட்டினால் நன்றாக இருக்கும்.

வரவேற்பு


ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி:- ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது வரவேற்கத்தக்கது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. வெளி மாநிலம் செல்லும் சாமானியர்கள் போலீசாரை அடையாளம் காணுவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது. தற்போதைய நடைமுறைப்படி மாநிலத்துக்கு, மாநிலம் சீருடை மாறும்போது குழப்பம் ஏற்படத்தான் செய்யும். போலீஸ் யார்? என்று கேட்டுக்கொண்டு போய் பார்க்கும் நிலை இருக்கக்கூடாது. பார்த்தமாத்திரத்தில் இவர்தான் போலீஸ்காரர் என்று தெரியவேண்டும். அவசரமான, அபாயமான சந்தர்ப்பத்தில் இது மிகவும் முக்கியம் ஆகும். அந்தவகையில், ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை வரவேற்கத்தக்கது.

உலக அடையாளம் கிடைக்கும்


சென்னை ஐகோர்ட்டு வக்கீல் டி.மீனாட்சி:- நம் நாட்டு ராணுவத்தில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சேருகிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று அவர்களை பிரித்து தனி சீருடை வழங்காமல் ஒரே சீருடை போன்று நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வந்தால் வரவேற்புக்குரியதுதான். நாடு முழுவதும் வக்கீல்களுக்கு ஒரே சீருடை இருக்கிறது.

இதே போன்று போலீசாருக்கும் ஒரே சீருடை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். வெளிநாடுகளில் பல மாகாணங்கள் இருந்தாலும் ஒரே சீருடையில்தான் போலீசார் கம்பீரமாக காணப்படுகின்றனர். எனவே நம் நாட்டிலும் இந்த நடைமுறை வந்தால் இந்த மாநில போலீசார் என்று அடையாளம் இல்லாமல் இந்திய நாட்டின் போலீசார் என்ற பெருமை உலகளவில் சென்றடையும்.

என்ன பயன்?


போரூரை சேர்ந்த குடும்பத்தலைவி ரதி வைரவன்:- நமது நாட்டில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாக இணைந்தவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப போலீசாரின் சீருடை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குஜராத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை இல்லை. எல்லா மாநிலங்களிலும் போலீசின் சட்டத்திட்டங்கள் ஒன்றாக இல்லை. அப்படி இருக்கும்போது, போலீசுக்கு ஒரே மாதிரியான சீருடை கொண்டு வந்து என்ன பயன் கிடைக்கப்போகிறது?.

அடையாளம் கிடைக்கும்



திருவல்லிக்கேணியை சேர்ந்த வெங்கட்ராமன்:- போலீசாரின் சீருடையை மாற்றுவதற்கு பதிலாக அவர்களுடைய எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கலாம். இவ்வாறு செய்தால் குற்றங்களின் எண்ணிக்கையாவது குறையும். போலீசார் எந்தவித சிரமமும் இன்றி, திறமையாக பணியாற்றுவதற்கு உகந்த சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். அதே சமயத்தில், நாடு தழுவிய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை வந்தால், உலக அரங்கில் இந்திய போலீசாருக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story