தள்ளாடுகிறதா தபால்துறை?


தனியார் ‘கூரியர்' நிறுவனங்கள் வருகையால் தபால்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?

கடிதாசிகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடிதாசுகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள்.

அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள்.

இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது.

வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன.

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்துவிட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

விரைவு தபால் சேவை

விருதுநகர் தலைமை தபால் அலுவலக அதிகாரி கூறுகையில், தபால் துறை ஏற்கனவே பொதுமக்கள் நலன் கருதி விரைவு தபால் சேவையை தொடங்கியுள்ளது. அதிலும் தபால் துறையின் பார்சல் சேவை பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்ட காலத்தில் தபால் துறைக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவு தபால் சேவை தொடங்கப்பட்ட பின்பு தனியார் கூரியர் நிறுவனத்தை விட தபால் துறையின் விரைவு தபால் சேவை அதிக ஆதரவையும் வருமானத்தையும் பெற்று தந்துள்ளது. அதிலும் தற்போது விரைவு தபால் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்து அட்டை

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் தபால்துறை அதிகாரி ராஜேந்திரன்:- தபால்துறை தற்போது அதி நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. குறைந்த கட்டணம், விரைவான சேவை என்பதால் மக்கள் தபால்துறையை தான் அதிகம் விரும்புகின்றனர். பண்டிகை காலங்களில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது இப்போது குறைந்துள்ளது. டு்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவைகள் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது முற்றிலும் முடங்கி போய்விட்டது. இருப்பினும் தபால் துறையின் சேவை முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது.

சாத்தூைர சேர்ந்த தபால் அதிகாரி ஜவகர்:-

கூரியர், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றால் தபால் துறையில் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது தபால் நிலையமும் வங்கியை போன்ற சேவைகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் புதுப்பிக்கும் பணியை அவர்கள் இடத்திற்கு சென்றே செய்கிறோம். தற்போது கிராமங்களிலும் அதிகமாக படித்தவர்கள் இருப்பதால் கிராமங்களுக்கான சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. தபால் ஊழியர்கள் குக்கிராமங்களுக்கு சென்று தபால்களை குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்து வருவதால் தபால் துறை முன்னேற்ற பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறது.

உண்மை தகவல்

அல்லாளப்பேரிைய சேர்ந்த கல்லூரி மாணவர் முருகேசன்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தபால் சேவை மூலம்தான் தகவல்களை அறிந்து கொண்டோம். வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிவிப்புகள் போன்றவை தபால் சேவை மூலம் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் வந்தபின்பு செய்திகளும் எந்த ஒரு தகவல்களும் உடனடிக்குடன் பொதுமக்களை சென்றடைந்தாலும் அதில் அதிக நம்பகதகுந்த செய்திகள் இல்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் வந்தபின்பு தபால் சேவை வெகுவாக குறைந்துள்ளது. தபால் சேவைதான் பொதுமக்களுக்கு முறையான தகவல்களை கொண்டு போய் சேர்க்க முடியும். எனவே தபால் சேவை பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

தனிநபர்பயன்பாடு குறைவு

சிவகாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் மைக்கேல்மதன்: தபால், தந்தி பயன்பாடு கடந்த 25 ஆண்டுகளில் பல மடங்கு சரிந்துள்ளது. குறிப்பாக தொலைபேசி வருகைக்கு பின்னர் தந்தி காணாமல் போனது. செல்போன் வருகைக்கு பின்னர் தபால் காணாமல் போனது. குறிப்பாக சமூக வலைதளங்களின் வருகைக்கு பின்னர் தபால், தந்தியின் சேவை வெகுவாக குறைந்தது. தற்போது தனிநபர் பயன்பாடு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அலுவல் தொடர்பான கடிதங்கள் மட்டுமே தற்போது தனிநபர்களுக்கு பயன்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள 50 சதவீதம் மக்கள் இ.மெயில் வசதியை வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் இந்த வசதி குறைவு. ஆதலால் சில தகவல்களை தபால்கள் மூலம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு தொடர்பு அலுவலங்களில் இன்னும் தபால்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டு சம்பந்தப்பட்ட தகவல்களும் தபால்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தபால், தந்தி சேவை இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.


Next Story