ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா கவர்னருக்கு ஊதியம் தரப்படுகிறது? தி.மு.க. நாளேடு கண்டனம்
ஆளும் ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு கவர்னருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று தி.மு.க. நாளேடு கண்டனம் வெளியிட்டு இருக்கிறது.
கவர்னருக்கு கண்டனம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அவரது பேச்சு தங்களது ஆட்சியை விமர்சிப்பதாக தி.மு.க. கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.
இந்தநிலையில் தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி தனது பதவிக்குரிய பொறுப்பு உணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுகிறார். அவர் தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு, தனது ஆற்றலையும் அறிவையும் காட்டுவதாக எண்ணி தாறுமாறாக பேசி, தமிழ் மக்களின் உணர்வோடு விளையாட தொடங்கியுள்ளார். எல்லை தாண்டி மூக்கை நுழைத்து நோட்டம் பார்க்கிறார்.
தமிழ்நாடு நீங்கள் கவர்னராக இருந்த மற்ற மாநிலங்களை போன்றதல்ல. இது அரசியல் தெளிவுமிக்க மண். இதனை பலமுறை கூறி விட்டோம். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இதில் சந்தேகம் இருந்தால் மாறுவேடத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்து பார்க்கலாம். அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாயை கொடுத்து பார்க்கட்டும். அவர் கவர்னருக்கு தெளிவான பாடம் நடத்திடும் அளவு அறிவாற்றல் பெற்றவர்.
வரலாற்று பக்கங்கள்
முதல்நாள், கே.கே.ஷா என்றால், கலைஞர் கருணாநிதி ஷா என்று பேசி விட்டு மறுநாளே மத்திய அரசின் அழுத்தத்திற்கு பயந்து பல்டி அடித்த கவர்னர் ஷா பற்றியும், அழுத்தங்கள் ஆயிரம் வந்தாலும், உண்மைக்கு மாறாக கருத்தறிவிக்க ஒப்பேன் என்று நிமிர்ந்து நின்ற கவர்னர் பர்னாலா குறித்தும், ஜெயலலிதா ஆட்சியின் போது அவராலும், அவரது கட்சினராலும் பல வகையிலும் அசிங்கப்படுத்தப்பட்டு வெந்து நொந்த சென்னாரெட்டி பற்றியும், மாநில உரிமைகளில் தலையிட்ட கவர்னர் பன்வாரிலால் தி.மு.க. உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளால் சந்தித்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் தந்து, கவர்னர் ரவிக்கு தமிழகத்தின் அரசியல் தட்ப-வெப்ப சூழ்நிலைகளை விளக்கிடும் ஆற்றல் பெற்றிருப்பதை அறியலாம்.
நாம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தின் வரலாற்று பக்கங்களை புரட்டி காண்பிப்பதை கண்டு மிரட்டுவதாக அவர் கருதி விடக்கூடாது.
எதிரான பிரசாரம்
சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் பின்னர் மரியாதை நிமித்தமாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். சந்தித்தவர்கள், தமிழ்நாடு நாட்டிலேயே ஒரு முன்னேறிய மாநிலமாக உள்ளதை குறிப்பிட்டு கவர்னர் என்ற முறையில் ஆர்.என்.ரவியிடம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். கவர்னருக்கு திராவிட மாடல் என்ற சொல் வேப்பங்காயாக கசந்துள்ளது. திராவிட மாடலை அவர்களிடம் விமர்சித்துள்ளார்.
அவர் கவர்னராக இருக்கும் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியபோது மகிழாமல் திராவிடத்தின் மீது அவர் எரிச்சலை கொட்டி இருக்கிறார்.
ஆளும் ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய, மாநில அரசு கவர்னர்களுக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, எடுபிடிகள், ஏவலாளிகளை தரவில்லை. அரசியல் சட்டம் கவர்னருக்கு அளித்துள்ள பணிகளை விடுத்து மற்ற எல்லா வேலைகளிலும் சில கவர்னர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி உணர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் தமிழிசை
சென்னையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ''தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன். தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவேன்'' என்று பேசியிருந்தார்.
அதற்கு பதில் அளித்து கூறப்பட்டு இருப்பதாவது:-
தெலுங்கானாவில் அவரால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து பட்டிடும் பாட்டால் வெளிவந்த ஆதங்க பேச்சாகக் கூட இது இருக்கலாம்.
இது தமிழக கவர்னருக்கு அவர் மறைமுகமாக தந்த எச்சரிக்கையாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து அவர் சொன்ன செய்தியை, கவர்னர் ரவி கவனமாக படித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.