ஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தமா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில்..!


ஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தமா? - தலைமை தேர்தல் அதிகாரி பதில்..!
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் 25ம் தேதி மாலை நிறைவடைய உள்ளது. திமுக சார்பில் வாக்காளர்களை சில இடங்களில் அடைத்து வைத்து, பரிசு பொருட்கள் வழங்குவதாகவும், வீடு வீடாக சென்று பணம், பரிசு பொருட்கள், உணவு பொருட்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இடைத்தேர்தலையொட்டி, மாதிரி ஓட்டுப்பதிவு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாகு கூறுகையில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான தன்னிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆதாரமாக எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும் சி-விஜில் செயலி மூலம் 1 புகார் மட்டுமே வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால், இவ்வாறு சமூக வலைதளத்தில் இருப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story