'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?


ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?
x

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', ‘ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது ‘ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.

பெரம்பலூர்

ஒரே போலீஸ் சீருடை

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு கடந்த 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைத்துக்கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல் டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.

இதேபோல் மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

மாநில அரசின் உரிமை பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வனவர் அய்யாவு:- ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி முன்மொழிந்திருப்பது சாத்தியமற்றது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கின்ற செயல். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலங்களை கொண்டு வர முயற்சியாக கருதுகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கலாசாரம் உள்ளதால் இதை நடைமுறைப்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகள் தான் ஏற்படுத்தும்.

ஊதிய வேறுபாடு

பெரம்பலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன்:- இது சாத்தியமற்றது. ஒவ்வொரு மாநிலத்தில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் போலீசாருக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் போலீசாரின் ஊதியம் வேறுபடுகிறது. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். உயர் அரசு அதிகாரிகள் சிலர் பாதுகாப்புக்கு வரும் போலீசாரை வேறு வேலைக்கு பயன்படுத்துகின்றனர்.

போலீஸ் பற்றாக்குறை

ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் கணேசன்:- நடைமுறையில் சாத்தியம் இல்லையென்றாலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை மத்திய அரசு கொண்டு வந்தது போல் ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை கொண்டு வந்து அமல்படுத்தினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. முதலில் போலீசாருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. ஓய்வும் இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் போலீசாரின் ஊதியம் வேறுபடுகிறது. அதனை சரி செய்ய வேண்டும். போலீசாருக்கு தினமும் 8 மணி நேரம் தான் வேலை இருக்க வேண்டும். அதற்கு போலீஸ் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். போலீசாரின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்த பிறகு ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை என்ற திட்டத்தை மத்திய அரசு யோசிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நலத்திட்டங்களில் மாற்றம்

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து போலீசார் கூறுகையில், மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது. அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது. தமிழகத்தில் போலீசாரின் சீருடை போல் வனத்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படைக்கும் சீருடை காக்கி தான். அவர்களை விவரம் தெரியாத பொதுமக்கள் போலீசார் என நினைத்து வருகின்றனர். அவர்களுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வரலாம். போலீஸ் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு பதிலாக போலீசாருக்கான நலத்திட்டங்களில் நல்ல மாற்றங்கள் கொண்டு வரலாம். ஒரே மாதிரியான நல்ல சம்பளம், போலீசாரின் எண்ணிக்கை உயர்வு போன்றவற்றில் அக்கறை காட்டினால் நன்றாக இருக்கும் என்றனர்.


Next Story