ஜெயக்குமார் மரணம்: கொலையா..? தற்கொலையா..? - தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
நெல்லை,
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜெயக்குமாரின் உடலில் 15 செ.மீ-50 செ.மீ. அளவு கடப்பா கல், கம்பியுடன் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் வாயில் இருந்தது. ஜெயக்குமாரை காணவில்லை என 3-ம் தேதி புகார் வந்தது; அன்று இரவு 9 மணிக்கு வழக்கு பதியப்பட்டது. புகார் மனுவுடன் 2 கடிதங்கள் தரப்பட்ட பின் காணவில்லை என்ற வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சைபர் போலீஸ் மற்றும் தடையை வீழ்த்தும் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மரணத்தில் பல கேள்விகளுக்கு தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இதில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையே வந்துள்ளது; முழு அறிக்கை வரவில்லை. ஜெயக்குமார் மரணம் தற்கொலை என்றோ, கொலை என்றோ முடிவு செய்யவில்லை. மர்ம மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கிடைத்த தடயங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் பிரச்சினை என பல உள்ளது.
ராமஜெயம் விவகாரத்தில் கொலை என முடிவு செய்தோம்; ஆனால் ஜெயக்குமார் விவகாரத்தில் அப்படி எளிதாக முடிவுக்கு வர முடியவில்லை. ஜெயக்குமார் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்; ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்.
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 10 தனிப்படைகள் மூலம் தீவிர புலனாய்வு விசாரணை நடந்து வருகிறது. அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.