கருப்பு இறால் விலை கிடு,கிடு உயர்வு


கருப்பு இறால் விலை கிடு,கிடு உயர்வு
x

அதிராம்பட்டினத்தில் மீன் வரத்து குறைந்தது. கருப்பு இறால் விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் மீன் வரத்து குறைந்தது. கருப்பு இறால் விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.

மீன்வளம் குறைந்தது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும் கடலில் மீன் இனப்பெருக்கத்துக்கு காரணமாக உள்ள கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்டவைகள் அழிந்து வருவதாலும் கடலில் மீன் வளம் குறைந்து காணப்படுகிறது.

இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஏராளமானவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இறால் ஏற்றுமதி

பொதுவாகவே தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் அலையாத்திக்காடுகள் உள்ளதால் இறால் உற்பத்தி மற்றும் நண்டு அதிகளவில் கிடைக்கும். இறால்களில் ஒயிட் இறால், டைகர் இறால், கருப்பு இறால், பிளவர் இறால், தாழை இறால் என பலவகையான இறால்களும் இந்த பகுதியில் அதிகமாக பிடிபடுகின்றன. மேலும் இங்குள்ள இறால்கள் உணவுக்கு ஏற்றவகையில் நல்ல ருசியாக இருக்கும் என்பதால் இங்கு உள்ள இறால் மீன்களுக்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் பிடிபடும் இறால்களை ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்துவந்தனர்.

விலை உயர்வு

இந்த நிலையில் கடல் பகுதியில் இறால்களின் வரத்து குறைந்துவிட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இறால் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், 'இறால் வகைகளில் ஒயிட் இறால் எனப்படும் வெள்ளை இறாலைத் தான் வியாபாரிகள் முதல் ரகமாக வைத்து வாங்குவார்கள்.

அதாவது குறைந்தது 30 கிராமிலிருந்து 50 கிராம் வரை எடை உள்ள இறால் முன்பெல்லாம் கிலோ ஒன்றுக்கு ரூ.550 வீதம் வாங்குவார்கள்.

மற்ற இறால்களை வெள்ளை இறாலை விட குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள்.

வரத்து இல்லை

தற்போது வெள்ளை இறால்கள் வரத்தே இல்லாததால் அடுத்த ரகமாக இருக்கும் கருப்பு இறால்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.280-க்கு விற்ற கருப்பு இறால் தற்போது கிலோ ரூ.350 ஆக அதிகரித்துள்ளது.

இறால்களின் வரத்து குறைந்து விட்டதால் நாங்கள் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்பு கொடுகட்டிப்பறந்த இறால் ஏற்றுமதியும் தற்போது மந்தமான நிலையில் உள்ளது' என்றனர்.


Next Story