கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு


கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் -  மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 3 Oct 2023 12:05 PM IST (Updated: 3 Oct 2023 2:03 PM IST)
t-max-icont-min-icon

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் அம்பையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர் சிங் பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பொறுப்பேற்ற பின்னர் அம்பை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து குற்ற வழக்குகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

கல்லிடைக்குறிச்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 30-க்கும் அதிகமானோர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி ஆதி திராவிட நலத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.


Next Story