சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு


சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு
x

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

சர்வதேச சிறுதானிய ஆண்டு

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கலாம்

சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும். தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு 'ஏ' அல்லது 'பி' சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த விரிவான விவரங்களை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story