பொதுமக்கள் 70 பேரிடம் விசாரணை
புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த சம்பவத்தில் இதுவரை பொதுமக்கள் 70 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இறையூர் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் விசாரணை தொடர்பாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
இறையூர் வேங்கைவயல் காலனியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அசுத்தம் செய்திருந்தது தொடர்பாக வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
70 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக இதுவரை பொதுமக்களில் 70 சாட்சிகளை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஆய்விற்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.