பாண்டு பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதி விவகாரத்தில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கி.வீரமணி வரவேற்பு
பாண்டு பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதி விவகாரத்தில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கி.வீரமணி வரவேற்பு.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், பிரபல கம்பெனிகள், முதலாளிகள், தனி நபர்கள், அமைப்புகள் எவற்றிடம் இருந்தும் பெறும் நன்கொடைகளுக்கான திறந்த புத்தகம் போன்று பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரியும் முந்தைய சட்ட நிலையை மிக தந்திரமாக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் மோடி அரசு பதவி ஏற்ற பின்னர் தலைகீழாக மாற்றியது.மிக தந்திரமாக தேர்தல் நிதி நன்கொடைகளை தேர்தல் பாண்டு பத்திரங்கள் மூலம் வங்கிகளில் வாங்கி, அவர்கள் விரும்பும் கட்சிக்கு கொடுக்கலாம் என்றாக்கி அதன் மூலம் திடீரென்று ஆளும் பா.ஜ.க. ஏராளமான பணத்தை தேர்தல் பாண்டுகள் மூலம் பெற்றதோடு கொடுத்தவர் யார்? என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரியாது என்பது ஜனநாயக தேர்தல்களை கீழ்மைப்படுத்தும் அரசியல் ஒழுக்கக்கேடு ஆகும். இந்தநிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள் மூலம் கட்சிகள் நன்கொடை பெறுவதில் உள்ள முறைகேடுகளை களைந்தெறிய வற்புறுத்தும் வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்தது. ஜனநாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கை ஆகும். சுப்ரீம் கோர்ட்டுதான் மக்களின் கடைசி நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.