சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு: பொங்கல் பண்டிகை கொண்டாட உற்சாக பயணம்


சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு: பொங்கல் பண்டிகை கொண்டாட உற்சாக பயணம்
x

பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் பஸ்-ரெயில் நிலையங்கள் கூட்டத்தால் திணறி வருகின்றன.

சென்னை,

கல்வி, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ள வெளியூர்வாசிகள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும்.

அந்தவகையில் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் முதலே சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சாரை, சாரையாக மக்கள் படையெடுத்து வருகிறார்கள். ரெயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்கள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வாகனங்கள் பறந்து வருகின்றன.

சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

அந்தவகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் உள்ளிட்ட பிரதான ரெயில்நிலையங்களில் நேற்று கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்கக்கூட இடமின்றி பயணிகள் நிறைந்திருந்தனர். உடைமைகள் வைக்கும் இடங்களிலும் பயணிகளே வியாபித்திருந்தனர்.

இதனால் ரெயில்நிலையங்களில் போலீசாரின் பாதுகாப்பும் கூடுதலாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் போலீசாரே சிரமப்படும் அளவுக்கு, ரெயில்நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

பயணிகள் கூட்டம்

ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில், பெரும்பாலானவர்களின் பார்வை பஸ்களின் மீது திரும்பியதால், ரெயில்நிலையங்களை காட்டிலும் பஸ் நிலையங்களில் தான் கூட்டம் எகிறியது. அதன்படி, சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடி போனது. வழக்கமாக இயக்கப்பட்ட பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்களிலும் பயணிகள் நிறைந்திருந்தனர். கோயம்பேட்டிலும் குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் போலீசார் கண்கொத்தி பாம்பாக கண்காணித்தபடி இருந்தனர்.

கோயம்பேடு தவிர மாதவரம், கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக்கழக பஸ்நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மேற்கண்ட இடங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அந்தவகையில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,855 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,955 பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர ஆம்னி பஸ்களிலும் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் இருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதுதவிர கார்கள், கால் டாக்சிகள் என குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியூர் நோக்கி வாகனங்கள் படையெடுத்தபடி இருந்தன. மோட்டார் சைக்கிள்களிலும் இளைஞர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்கின்றனர். இதனால் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது.

அந்தவகையில் சென்னையில் இருந்து நேற்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் இன்றும் (சனிக்கிழமை) சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் இன்றும் லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்ல இருக்கிறார்கள்.

அதேபோல பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, 16-ந்தேதி முதல் 18-ந்தேதிவரை, தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 4,334 சிறப்பு பஸ்களும், மற்ற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 599 பஸ்களும் இயக்கப்பட இருக்கின்றன.

கடும் போக்குவரத்து நெரிசலில்

மக்களுக்கு கைகொடுத்த மெட்ரோ ரெயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். பஸ்-ரெயில் நிலையங்கள் நோக்கி பயணிகள் கூட்டம் படையெடுத்தன. இதனால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நேற்று மாலை முதல் நகரின் அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்பதையும், ஊர்ந்தபடியே செல்வதையும் பார்க்க முடிந்தது.

இக்கட்டான இந்த சூழலில் குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்-ரெயில் நிலையங்களுக்கு செல்ல நினைத்தோருக்கு மெட்ரோ ரெயில்கள் உதவிபுரிந்தன. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல நினைத்த பயணிகள் மெட்ரோ ரெயில்கள் மூலம் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றடைந்தனர். இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மெட்ரோ ரெயில்களிலும் உட்கார இடமின்றி பயணிகள் கூட்டமாக நின்றுகொண்டு பயணித்தனர்.

அந்தவகையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல நினைத்த பயணிகளுக்கு மெட்ரோ ரெயில்கள் கைகொடுத்தன என்றால் அது மிகையல்ல.


Next Story