திண்டுக்கல்லில் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் அறிமுக கூட்டம்
திண்டுக்கல்லில் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் அறிமுக கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில், உண்டு உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளியின் மாணவர்கள் அறிமுக கூட்டம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாதிரி பள்ளிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜேசுதாசன், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, அரசு மாதிரி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி திண்டுக்கல் அரசு மாதிரி பள்ளிக்கு 553 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கற்பிக்க நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் மாதிரி பள்ளியில் உள்ளன. இங்கு நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கும், ஆளுமை மற்றும் தலைமை பண்பை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதன்மூலம் அவர்களிடம் இருக்கும் தனித்திறமை வெளிக்கொண்டு வரப்பட்டு, மெருகேற்றப்படும். மேலும் கலை, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். மாதிரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர முழு தகுதியுடன் வெளியே வருவார்கள். இந்த வாய்ப்பை மாணவ-மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து அரசு மாதிரி பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.