போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என போலீஸ் சூப்பரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என போலீஸ் சூப்பரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
வாட்ஸ் அப் எண் அறிமுகம்
வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போதை பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 9092700100 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புகார் தெரிவிக்கலாம்
போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் இந்த எண்ணில்புகார் தெரிவிக்கலாம். எனது நேரடி கட்டுப்பாட்டில் இந்த எண்ணில் வரும் புகார்கள் குறித்து விசாரிக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும். தகவல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவிக்கப்படும்.
இதுகுறித்து பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. 24 மணி நேரமும் மக்கள் புகார் அளிக்கலாம். போதை பொருட்கள் ஒழிப்பின் ஒரு பகுதியாக இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத ஆண்டில் இதுவரை கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக சுமார் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவை விட இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு அதிகம். கஞ்சா, குட்கா கடத்திய 80 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.