பொதுமக்களுடன் மதுபோதையில் தகராறு: தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுகளை பீர்பாட்டிலால் குத்திய ரவுடி


பொதுமக்களுடன் மதுபோதையில் தகராறு: தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுகளை பீர்பாட்டிலால் குத்திய ரவுடி
x

பொதுமக்களுடன் மதுபோதையில் தகராறு செய்ததை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுகளை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் ரவுண்டு பில்டிங் அருகே சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக நேற்று முன்தினம் இரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த ஜெ.ஜெ.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் ஜீப்பில் அங்கு சென்றார்.

போலீஸ் வருவதை கண்டதும் அங்கிருந்து சமூக விரோதிகள் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் அதே பகுதியில் தகராறு நடப்பதாக ஜெ.ஜெ நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தருக்கு தகவல் வந்தது. அவர் ஏட்டுகள் நந்தகோபால் (வயது 47) மற்றும் ராயப்பன் (42) ஆகியோரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளியான பாடி புதுநகரைச் சேர்ந்த ரவுடி திருட்டு மணி என்ற மணிகண்டன்(27) குடிபோதையில் பொது மக்களிடம் தகராறு செய்வது தெரிந்தது. கையில் உடைந்த பீர் பாட்டிலுடன் வீண் தகராறு செய்து கொண்டிருந்த மணிகண்டனை, போலீஸ் ஏட்டுகள் இருவரும் தடுக்க முயன்றனர்.

அப்போது குடிபோதையில் இருந்த மணிகண்டன், கையில் இருந்த உடைந்த பீர்பாட்டிலால் ஏட்டுகள் இருவரையும் கடுமையாக குத்தினார். இதில் ஏட்டு நந்தகோபாலின் மூக்குப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. ராயப்பனுக்கு இடது காதின் மேல் பகுதி கிழிந்தது. இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த ஏட்டு நந்தகோபாலுக்கு மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இதற்கிடையில் போலீஸ் ஏட்டுகளை தாக்கிய ரவுடி மணிகண்டனை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story