"போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம்" ;டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
‘போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம்’ என்று திண்டுக்கல்லில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திண்டுக்கல் வந்தார்.
இதையொட்டி அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணம், செல்போன்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார்.
அந்த நகைகள், பணம், செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகளை பாராட்டினார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணம், செல்போன்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம், டி.ஜி.பி. வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
அதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், கொலை, கொள்ளை, மோசடி வழக்குகளில் சிறப்பாக துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்காரர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பணமுடிப்பு ஆகியவற்றையும் வழங்கினார்.
இதில் துணை சூப்பிரண்டுகள் முருகன், கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
போலீஸ் நிலையங்களில் ஆய்வு
அதன்பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் இருமாவட்ட போலீசார் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தொடங்கியது. இதில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் டோங்கரே (தேனி) மற்றும் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.
அப்போது குற்றம் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு தொடர்பாக 2 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை டி.ஜி.பி. வழங்கினார். பின்னர் போலீசாரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா மற்றும் வடக்கு போலீஸ் நிலையங்களில் அவர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அறை, ஓய்வறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
ரூ.1½ கோடி நகை, பணம் மீட்பு
முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு குற்றங்களை கண்டுபிடித்து உள்ளனர். திருடு போன செல்போன், நகைகள், பணம் என ரூ.1½ கோடி மதிப்பில் மீட்கப்பட்டு இருக்கிறது. அவற்றை இன்று (நேற்று) சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அதில் ஒருசில வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை மராட்டிய மாநிலத்துக்கு சென்று போலீசார் கைது செய்து உள்ளனர்.
அப்போது குற்றவாளிகளின் கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்று உள்ளனர். இதனால் போலீசார் துப்பாக்கியை காண்பித்து எச்சரித்து குற்றவாளிகளை கைது செய்து இருக்கின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செல்போன் மூலம் மோசடியில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகள், வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகளை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதன்மூலம் அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் ஒப்படைத்து இருக்கின்றனர்.
கஞ்சா செடிகள்
இதுதவிர வேலை வாங்கி தருவதாக மோசடி, பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட நபரை குஜராத்துக்கு சென்று போலீசார் கைது செய்தனர். மேலும் பொதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி இருக்கிறோம்.
ஒரு காலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் பிற பகுதிகளுக்கு கஞ்சா விற்கும் இடமாக இருந்தது. கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் கேரள போலீசாருடன் இணைந்து சோதனை செய்வோம். அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கஞ்சா செடிகளை அழித்தோம். தற்போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கஞ்சா செடி பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு இருக்கிறது.
விழிப்புணர்வு பிரசாரம்
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் எங்கும் கஞ்சா செடி பயிரிடுவது இல்லை. ஆனால் ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கஞ்சா பயிரிடப்பட்டு, மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது. ஆனால் திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். ஒருசில கஞ்சா கடத்தல்காரர்களை ஆந்திரா, ஒடிசாவுக்கே சென்று கைது செய்துள்ளனர்.
இதனால் 80 சதவீதத்துக்கு மேல் கஞ்சா விற்பனை குறைந்து இருக்கிறது. பல கிராமங்கள், பல போலீஸ் நிலைய எல்லைக்குள் கஞ்சாவே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் விரைவில் சில மாவட்டங்களில் கஞ்சா, போதை பொருள் விற்பனை இல்லை என்ற நிலையை கொண்டு வருவோம். இதற்காக முதல்-அமைச்சர் 4 முறை ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறார். 70 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்பட்டது.
போதை பொருள் இல்லாத தமிழகம்
கஞ்சா கிடைக்காத காரணத்தால் அதற்கு அடிமையான நபர்கள், மருந்து கடைகளில் கிடைக்கும் ஒருசில மருந்து மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்து உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, மருத்துவத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் போதை பொருட்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.