வெள்ளித்தேர் வழங்கவும் நடவடிக்கை: "நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள்" அமைச்சர் சேகர்பாபு பேட்டி
“நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
"நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நெல்லையப்பர் கோவிலுக்கு நேற்று வந்தார். சுவாமி-அம்பாளை தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் திருப்பணிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபம், மூங்கில் மரம் உள்ள இடம் ஆகியற்ைற பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திமதி யானைக்கு பழம் வழங்கினார். மேலும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ் 100 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆனித்திருவிழாவையொட்டி ஒரு நாளைக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் நூற்றாண்டுகளாக மூலிகை தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மூலிகை தைலம் தயாரிக்கும் பணி கடந்த 25 நாட்களாக நடந்து வருகிறது.
ரூ.4 கோடியில் திருப்பணி
கோவிலில் சிதலமடைந்த தெப்பக்குளம், சரிந்த மண்டபம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோவிலுக்கு விரைவில் உதவி ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். கோவிலை சுற்றிக்காட்டுவதற்கு வழிகாட்டிகள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.
நெல்லையப்பர் கோவில் தேர் ஓடும் ரதவீதிகளில் பூமிக்கு அடியில் மின்சார ஒயர்கள் பதிக்கும் பணிக்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.
கும்பாபிஷேகம்
தமிழகத்தில் உள்ள முக்கியமான 48 கோவில்களில் தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 கோவில்களுக்கு தங்கத்தேர் செய்யவும், 2 கோவில்களுக்கு வெள்ளித்தேர் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித் தேர் செய்வது குறித்து முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு ரூ.19 கோடி செலவில் 10 கோவில் தேர்கள் புனரமைப்புபணி நடைபெற உள்ளது. ரூ.11 கோடியில் 13 புதிய தேர்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
ரூ.100 கோடியில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் ஆவணி மாதம் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1,500 கோவில்கள் ரூ.1,000 கோடியில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவர் அவர் கூறினார்.
முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டை பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து, யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, மாநகராட்சி கவுன்சிலர் உலகநாதன், கணேஷ்குமார் ஆதித்தன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று வந்தார். பின்னர் அவர் கோவிலில் உள்ள நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் யானைகளுக்கு கேரட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். அதன் பின் சிவன் சன்னதி இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீண்டும் சிவன் சன்னதி அமைப்பது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி, மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி, களக்காடு யூனியன் சேர்மன் இந்திரா ஜார்ஜ்கோசல், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி இசக்கித்தாய் உள்பட பலர் உடன் சென்றனர்.