தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் வருகிற மார்ச் மாதம் நிறைவுபெறும்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி


தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு  நதிநீர் இணைப்பு திட்ட பணிகள்  வருகிற மார்ச் மாதம் நிறைவுபெறும்-  அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x

தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் வருகிற மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

திருநெல்வேலி

தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் வருகிற மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

நதிநீர் இணைப்பு திட்ட பணிகள்

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதியான திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதற்காக வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் கன்னடியன் கால்வாயில் தனியாக மதகு அமைத்து, அங்கிருந்து எம்.எல். தேரி வரையிலும் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளநீர் கால்வாய் தோண்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.369 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்ட பணிகள் தற்போது ரூ.873 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் பெரிய திட்டமாக பொன்னாக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மட்ட கால்வாய் மற்றும் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

இந்த நிலையில் வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் நெல்லை திடியூர் தமிழாக்குறிச்சி அருகில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும், பச்சையாற்றின் தண்ணீரும் சேர்ந்து வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் திறந்து விடப்படும் இடத்தில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அணைப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நெல்லை அருகே பொன்னாக்குடி நான்கு வழிச்சாலை பகுதியில் கட்டப்படும் பாலப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற மார்ச் மாதத்தில்...

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன். நீர்வளத்திட்ட பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளவில்லை. தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற அக்டோபர் மாதத்தில் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் 100 சதவீதம் முடிந்து விட்டன. 3-ம் கட்ட பணிகள் 99 சதவீதமும், 4-ம் கட்ட பணிகள் 48 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. வருகிற மார்ச் மாதம் நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் முழுமையாக நிறைவடையும். அதன்பிறகு வெள்ளநீர் கால்வாயில் எம்.எல். தேரி வரையிலும் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

ஜம்புநதி-ராமநதி இணைப்பு

கடையம் அருகே ஜம்புநதி-ராமநதி இணைப்பு கால்வாய் திட்டம் வனத்துறையின் அனுமதிக்கு பின்னர் விரைவுப்படுத்தப்படும். முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளா அரசிடம் இனி பேச மாட்டோம். இதுதொடர்பாக கோர்ட்டுக்கு சென்று விட்டோம். கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

நெல்லை மாவட்டத்தில் அனைத்து கல்குவாரிகளும் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். கல்குவாரி உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளார்கள். தொழிலாளர்களின் நலனுக்காக கல்குவாரி விஷயத்தில் முடிவெடுக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. அமைச்சர்கள் குறித்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருவது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டார்.

சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர்கள் ஞானசேகரன், பொன்ராஜ், கண்காணிப்பு பொறியாளர்கள் பத்மா, செல்வராஜ், செயற்பொறியாளர் பழனிவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story