4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 25 பேரிடம் விசாரணை
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக 4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 25 பேரிடம் உதவி திட்ட அதிகாரி விசாரணை நடத்தினார்
சங்கராபுரம்
வளர்ச்சி திட்டப்பணிகளில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாவும், போலி ஆவணங்கள் தயாரித்து வேலைகள் ஏதும் செய்யாமல் குறைந்த மதிப்பீடு தயார் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது.
மேலும் மேற்கண்ட காலக்கட்டத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், மேற்பார்வையாளர் உள்பட 40 பேர் மீது சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரிடம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன் புகார் அளித்தார்.
கலெக்டர் உத்தரவு
இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அறிவுறுத்தினார். இதையடுத்து, முறைகேடு புகாரை விசாரிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அன்னபூரணிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள், என்ஜினீயர்கள், உதவிப்பொறியாளர்கள் என 40 பேரும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அன்னபூரணி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் 4 முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட 25 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.
மற்றொருநாள் விசாரணை
பின்னர் இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வளர்ச்சி தி்ட்டப்பணிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான முதல் கட்ட விசாரணையில் 25 பேர் நேரில் ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள 15 பேரிடமும் மற்றொரு நாள் விசாரணை நடைபெறும். விசாரணை முடிந்ததும் அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட 25 பேரிடம் நடைபெற்ற விசாரணையால் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.